

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார் விஜய் சேதுபதி.
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.
'சைரா நரசிம்ம ரெட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சீரஞ்சிவி, அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா ஆகியோருடன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சமீபத்தில் ஒகேனக்கலில் சீரஞ்சிவி, சுதீப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்நிலையில், தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார் விஜய் சேதுபதி. சனில் இயக்கத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்கும் 'Marconi Mathai' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.
'பீட்சா', 'சூது கவ்வும்', 'விக்ரம் வேதா', '96' உள்ளிட்ட விஜய் சேதுபதி நடித்த பல படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ள 'சீதக்காதி' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.