

நீங்கள் இணையத்தில் கசியவிட்டும்கூட படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்திருக்கிறது. எங்ககிட்ட மோதாதீங்க என ‘டாக்ஸிவாலா’ வெற்றி விழாவில் பேசியுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நவம்பர் 17-ம் தேதி வெளியாகியுள்ள படம் ‘டாக்ஸிவாலா’. ராகுல் சங்கிரிட்யான் இயக்கியுள்ள இப்படத்தை, ஃபன்னி வாஸ், வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பிரமோத் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால், நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்தது.
ரிலீஸுக்குத் தயாரான நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ‘டாக்ஸிவாலா’ படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. “பல மாதங்களுக்கு முன்பே இப்படம் எங்கள் கையில் வந்தது. படம் திரைக்கு வந்து 2 வாரங்கள் கழித்து வெளியிடலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தோம். சிலரது செயல்பாடுகளால் இப்போதே வெளியிட்டு விட்டோம். இதற்கு வருந்துகிறோம்” என்று இப்படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் குழு இணையத்தில் தெரிவித்திருந்தது.
இதனால், படக்குழு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெலுங்குத் திரையுலகமே அச்சத்தில் உறைந்தது. படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட படம் ஹிட்டானது. இதனைக் கொண்டாடும் வகையில், நேற்று (நவ.23) வெற்றி விழா நடந்தது. அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, “நான் திரும்பி வருவேன் என்று சொன்னால் நிச்சயமாக வருவேன். எங்கள் படத்தை இணையத்தில் கசியவிட்ட ராக்கர்ஸ், ரூலர்ஸ் எல்லோரும் மன்னித்துவிடுங்கள். எங்களுடன் மோதாதீர்கள். நீங்கள் லீக் செய்தும்கூட படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது” என்றார்.
மேலும், படங்கள் திரைக்கு வருவதில் நிலவும் பொதுவான சிக்கல்கள் குறித்துப் பேசினார். ‘டாக்ஸிவாலா’ இணையத்தில் லீக் ஆனபோது துணைநின்ற அனைத்து திரை நட்சத்திரங்களுக்கும் நன்றி கூறினார்.