2.0 வேண்டாம்; விஜய் படம்தான் வேண்டும்: கேரள பழங்குடி குழந்தைகளுடன் சர்கார் படம் பார்த்த வயநாடு துணை கலெக்டரின் நெகிழ்ச்சிப் பதிவு

2.0 வேண்டாம்; விஜய் படம்தான் வேண்டும்: கேரள பழங்குடி குழந்தைகளுடன் சர்கார் படம் பார்த்த வயநாடு துணை கலெக்டரின் நெகிழ்ச்சிப் பதிவு
Updated on
1 min read

கேரளாவில் வயநாடு மாவட்டத்தின்  துணை ஆட்சியராக இருப்பவர் உமேஷ் கேசவன். இவர் தனது முகநூல் பக்கத்தில்  மனந்தாவாடியில் உள்ள பழங்குடி குழந்தைகளுடன் 'சர்கார்' திரைப்படத்துக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

அதில், ''மனந்தாவாடியில் உள்ள மகிலா சமக்யா விடுதியிலிருந்து பழங்குடி குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை 'சர்கார்' படத்திற்கு அழைத்துச் சென்றேன். 'சர்கார்' திரைப்படத்தில் அதிகம் அரசியல் சொல்லப்பட்டிருப்பதால் இந்த அப்பாவிக் குழந்தைகளுக்கு அது சரியாக இருக்காது என்று எனக்கு அப்படத்திற்கு அழைத்துச் செல்ல எனக்கு முதலில் விருப்பமில்லை.

நான் அவர்களிடம் 3டியில் வெளிவரும் '2.0' திரைப்படத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. விஜய் படத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்றனர்.

பெரிதாக அறியப்படாத பகுதிகளிலும் சினிமா மற்றும் அதன் உச்ச நடிகர்கள்  இளம் குழந்தைகளிடம்  நல்ல முறையிலான தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றனர்'' குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக,  கடந்த 2017 ஆம் ஆண்டு உமேஷ் கேசவன், கேரளாவின்  பழங்குடியின மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு சென்று வந்தது குறித்து அவர் வெளியிட்ட  பதிவில், "பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. உங்கள் இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா எனக் கேட்டால் ... இந்த மலையைச் சுற்றியுள்ள இடமே எங்கள் கழிவறை என்கிறார்கள்.

அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அங்கிருக்கும் சிறார், சிறுமியரில் பெரும்பாலானோருக்கு பள்ளி செல்ல விருப்பமில்லை. பள்ளிப் படிப்பால் பயனில்லை என நினைக்கிறார்கள் அவர்கள். தங்கள் சமூகத்தைத் தாண்டி என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. விவசாய வேலை இல்லாத நாட்களில் டி.வி.யில் விஜய் படங்கள் பார்க்கிறோம் என்கின்றனர்.

அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணத்தில் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை. அவர்களைச் சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் விஜய்" என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

மேலும், அம்மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வைக் கொண்டு வர, விஜய்யை இங்கு அழைத்து வர அவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து  உமேஷ் கேசவனை நேரில் அழைத்து அந்தக் கிராமத்தைப் பற்றி நடிகர் விஜய் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in