காஜல் அகர்வாலை முத்தமிட்டது ஏன்?- ஒளிப்பதிவாளர் விளக்கம்
‘கவசம்’ டீஸர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு விளக்கம் அளித்திருக்கிறார்.
ஸ்ரீனிவாஸ் மாமில்லா இயக்கத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கவசம்’. டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள இப்படத்துக்கு, தமன் இசையமைத்துள்ளார்.
‘கவசம்’ விளம்பரப்படுத்தும் பணிகளில் முதலாவதாக படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதற்கான விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் காஜல் அகர்வாலை பொதுமேடையில் ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு முத்தமிட்டது பெரும் சர்ச்சையானது.
இதற்காக #BanChotaKNaidu என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் டிரெண்டானது. இந்த விவகாரம் விஸ்வரூபமானதைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு, “காஜல் அகர்வால் மேல் உள்ள மதிப்பில் இவ்வாறு செய்தேன். அவரோடு பல படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். சவுந்தர்யாவுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகை காஜல். ஒரு நடிகையாகத் தன் வேலையை சிறப்பாகச் செய்கிறார். எனவே, ஒரு ஈர்ப்பினால் அவரை முத்தமிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
