

ரசிகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்குப் படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்நிலையில், அவர் நடித்துள்ள ‘நோட்டா’ படம், வெள்ளிக்கிழமை(அக்டோபர் 5) ரிலீஸாக இருக்கிறது.
ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. மெஹ்ரீன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், நாசர், சத்யராஜ், யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவின் படங்கள் தொடர்ந்து ஹிட்டாவதால், அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
“மாற்றத்துக்கு நாம் காரணமாக இருக்கிறோம். சினிமாவில், நம் வாழ்க்கை முறையில், கலாச்சாரத்தில், நாம் நாமாகவே இருக்கும் அணுகுமுறையில்... சமூக வலைதளங்களில் ஆக்கபூர்வமான எண்ணங்களை டிரெண்டாக்க இதுவே சரியான நேரம்.
உங்களில் பலர் என்னுடைய படங்களை டிபிக்களாக வைத்திருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் மற்றவர்களுடன் சண்டை போடுவதைப் பார்க்கிறேன். நான் அதைச் செய்யமாட்டேன். அதனால், நீங்களும் சண்டை போடக்கூடாது. அது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், நான், என்னுடைய வேலையில், வாழ்க்கையில் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வாழ்வோம்... வாழ விடுவோம்!
வெறுக்கப்பட்டாலும், மகிழ்வுடன் வாழ்வோம். நீங்கள் எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை. நான் எப்போதும் நல்ல படங்களையே கொடுப்பேன். உங்களிடம் இருந்து எந்தவிதமான இணைய அவதூறுகளையும் பார்க்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.