

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று அட்லி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியாகியுள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அனைத்து விநியோகஸ்தர்களும் லாபமடைந்து உள்ளனர். குறிப்பாக முதல் நாளை விட அதிக திரையரங்குகளில் தற்போது ‘காந்தாரா: சாப்டர் 1’ திரையிடப்பட்டு வருகிறது.
இதனிடையே ‘காந்தாரா: சாப்டர் 1’ குறித்து அட்லி, “’காந்தாரா: சாப்டர் 1’ வெளியாகும் போது வெளிநாட்டில் இருந்தேன். நான் இருக்கும் இடத்தில் இருந்து 2.5 மணி நேரம் பயணித்து அப்படத்தைப் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு தொலைபேசி வாயிலாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். இப்படத்தைப் பார்த்த பின்பு, அவர் எனக்கு மட்டுமல்ல, திரையுலகினர் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய நபராக மாறியிருக்கிறார்.
அவர் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக செய்திருக்கும் உழைப்பு அசாத்தியமானது. ஒரு இயக்குநராக ஒரு சில விஷயங்கள் சாத்தியமில்லை என்று சொல்லமுடியும். நடிகராகவும், இயக்குநராகவும் இருந்து இந்தப் படத்தினை இயக்கியிருக்கிறார். அதுவும் உடனடியாக நடிக்கக்கூடிய கதாபாத்திரமும் அதுவல்ல. உடல்ரீதியாகவும் சில விஷயங்களை செய்தாக வேண்டும். இந்தப் படத்துக்கு அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். இப்படத்துக்காக அவர் செய்திருக்கும் விஷயங்கள் எல்லாம் யூகிக்கவே முடியாதவை” என்று தெரிவித்துள்ளார் அட்லி.