நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு: நடிகர் சங்கத்தில் இருந்து 4 முன்னணி நடிகைகள் திடீர் ராஜினாமா

நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு: நடிகர் சங்கத்தில் இருந்து 4 முன்னணி நடிகைகள் திடீர் ராஜினாமா
Updated on
2 min read

நடிகர் திலீப் மீண்டும் மலையாளம் திரைப்பட நடிகர்கள் அமைப்பில்(எஎம்எம்ஏ) சேர்க்கப்பட்டதை எதிர்த்து, 4 முன்னணி நடிகைகள் அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலையாள முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்புகையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அந்த நடிகை போலீஸில் அளித்த புகாரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நடிகர் திலீப்பின் ஆலோசனையில் பெயரில் அந்த நடிகையை கடத்தியதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, நடிகர் திலீப்பை போலீஸார் கைது செய்தனர். ஏறக்குறை. 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், மலையாள நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரிந்தவுடன், மலையாள திரைப்பட நடிகர்கள் அமைப்பான அம்மாவின் பொருளாதார இருந்த திலீப் அந்த பதவியில் இருந்தும், உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இப்போது, ஜாமினில் வெளிவந்துள்ளநிலையில், மீண்டும் அம்மா-வில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார். கொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தலைவர் மோகன்லால் தலைமையில் நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் திலீப் பங்கேற்றபோது, பல நடிகைகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தங்களின் எதிர்ப்பை வலுவாகத் தெரிவிக்கும் வகையில், கடத்தலில் பாதிக்கப்பட்ட நடிகை, ரிமா காலிங்கல், ரம்யா நம்பீஸன், கீது மோகன்தாஸ் ஆகிய 4 பேரும் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதை திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியர் தலைவராக இருக்கும் மலையாள சினிமா பெண்கள் கூட்டுக்குழுவின் பேஸ்புக் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடத்தலில் பாதிக்கப்பட்ட நடிகை பேஸ்புக்கில் கூறுகையில், கடந்த காலத்தில் அந்த நடிகர் எனக்கு திரைப்படங்கள் ஏதும் கிடைக்கவிடாமல் சதி செய்தார், அப்போது அம்மா அமைப்பை அணுகியபோது அவருக்கு எதிராக நடவடிக்கை ஏதும் இல்லை. எனக்கு பலஇக்கட்டான நிலை ஏற்பட்டபோது, அம்மா அமைப்புஅந்த நடிகரை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தியது. இனிமேல் அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் பயனில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரம்யா நம்பீஸன் கூறுகையில்,. என்னுடைய சக நடிகைகள் மிகவும் கொடுமையான சூழலைசந்திக்கும் போது, எனக்கு அம்மா அமைப்பில் இருந்து விலகுவதைத் தவிர வேறுவழியில்லை. என் சகநடிகைக்கு எதிராக அம்மா அமைப்பு மனிதநேயமில்லாத நடவடிக்கையை எடுத்ததால், நான் ராஜினாமா செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கீது மோகன்தாஸ் கூறுகையில், அம்மா அமைப்பு தன்னுடைய முடிவுகளை யாரும் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை என்பதால், நான் எனது உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபோன்ற செயலுக்கு நான் துணை நிற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரிமா காலிங்கல் தனது பதிவில் கூறுகையில், அடுத்து வரும் தலைமுறையினர் நலனுக்காக, அவர்களின் தொழிலில் எந்தவிதமான சமரசமும் செய்யக்கூடாது என்பதற்காக நான் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனத் தெரிவித்தள்ளார்.

மேலும் நடிகர் திலகனின் மகள் சோனியா திலகனும், அம்மா அமைப்பின் செயலையும், திலீப்பை மீண்டும் சேர்த்துக்கொண்டதையும்கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in