மலையாள நடிகர் ஷாநவாஸ் காலமானார்

மலையாள நடிகர் ஷாநவாஸ் காலமானார்

Published on

பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகனும், நடிகருமான ஷாநவாஸ் (71) உடல் நலக் குறைவால் காலமானார்.

சென்னை நியூ காலேஜில் படித்து வந்த ஷாநவாஸ், பாலசந்திர மேனன் இயக்கிய பிரேம கீதங்கள் (1981) என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 25 படங்களில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். மலையாளம், தமிழ் மொழிகளில் 96 படங்களில் நடித்துள்ள அவர், கடைசியாக ‘ஜனகணமன’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

சில காலம் சினிமாவில் இருந்து விலகி வளைகுடா நாட்டில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சிறுநீரகப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த, அவருடைய உடல்நிலை இரு தினங்களுக்கு முன் மோசமடைந்ததால், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு காலமானார். அவர் மறைவுக்கு மலையாளத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஷாநவாஸுக்கு ஆயிஷா பீவி என்ற மனைவி, அஜித் கான், ஷமீர் கான் என்ற மகன்கள் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in