“தெலுங்குக்கு ராஜமவுலி, தமிழுக்கு லோகேஷ் கனகராஜ்!” - ரஜினி புகழாரம்

“தெலுங்குக்கு ராஜமவுலி, தமிழுக்கு லோகேஷ் கனகராஜ்!” - ரஜினி புகழாரம்
Updated on
2 min read

“தெலுங்குக்கு எஸ்.எஸ். ராஜமவுலி என்றால், தமிழுக்கு லோகேஷ் கனகராஜ்” என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் ‘கூலி’ விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ‘கூலி’ குறித்து ரஜினி பேசிய வீடியோ பதிவு ஒன்று திரையிடப்பட்டது.

அதில் ரஜினி, “திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எனது ‘கூலி' திரைப்படம் வெளிவருவதில் மகிழ்ச்சி. ‘கூலி’ எனது வைர விழாப் படம். தெலுங்குக்கு எஸ்.எஸ்.ராஜமவுலி என்றால், தமிழுக்கு லோகேஷ் கனகராஜ். அவருடைய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.

இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் அமீர் கான், பல வருடங்களுக்குப் பிறகு சத்யராஜுடன் ஒரு படம் நடிக்கிறேன். குறிப்பாக, நாகார்ஜுனா இதில் வில்லனாக நடிக்கிறார்.

‘கூலி’ கதையைக் கேட்ட பிறகு, எனக்கு சைமன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அந்தப் பாத்திரத்தில் யார் நடிப்பார் என்று காத்திருந்தேன். ஏனென்றால் அது மிகவும் ஸ்டைலாக இருக்கும். பல மாதங்கள் தேடினோம். ஒரு நடிகருடன் இந்தப் பாத்திரத்துக்காக ஆறு முறை அமர்ந்து பேசினோம். எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்துவிடுவதாக லோகேஷ் என்னிடம் கூறினார். 'யார் அவர்?' என்று கேட்டேன். அவர் நாகார்ஜுனாவின் பெயரைக் குறிப்பிட்டதும் அதிர்ச்சியடைந்தேன். பின்னர், அவர் ஒப்புக்கொண்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நாகார்ஜுனா பணத்திற்காகப் படம் செய்பவர் அல்ல. அவருக்கு அது தேவையில்லை. அவர் எப்போதும் நல்ல பையனாகவே இருக்க வேண்டுமா? சைமன் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டது அந்த எண்ணத்தில்தான் இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் 33 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் நடித்தோம். அப்போது இருந்ததைப் போலவே இப்போதும் இருக்கிறார். இன்னும் இளமையாகத் தெரிகிறார். எனக்கு முடி கொட்டிவிட்டது. நாகார்ஜுனாவுடன் வேலை செய்யும்போது, 'உங்கள் உடல்நல ரகசியம் என்ன?' என்று கேட்டேன், அதற்கு அவர் 'ஒன்றுமில்லை சார்... உடற்பயிற்சி, நீச்சல், கொஞ்சம் டயட். மாலை 6 மணிக்கு இரவு உணவு முடிந்துவிடும்.

என் தந்தையிடமிருந்து வந்த மரபணுக்களும் ஒரு காரணம். அது தவிர, என் தந்தை எனக்கு ஒரு அறிவுரை கூறினார். வெளி விஷயங்களை என் தலைக்குள் வர விடக்கூடாது என்று சொன்னார். நாங்கள் இருவரும் 17 நாள் ஷெட்யூலுக்காக தாய்லாந்து சென்றோம். அதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். சைமனாக அவரது நடிப்பைப் பார்த்து நான் வியந்து போனேன். இது பாட்ஷா - ஆண்டனி போல. கூலி - சைமன். சைமனாக என் நாகார்ஜுனா அற்புதமாக நடித்திருந்தார். அனிருத் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். நீங்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவளித்து, அது நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்று ரஜினி பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in