

மகேஷ் பாபு நடித்துவரும் 25-வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பரத் அனே நேனு’. தெலங்கானா பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இந்தப் படத்தில் நடித்திருந்தார் மகேஷ் பாபு. அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கொரட்டலா சிவா இயக்கிய இந்தப் படம், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வெளியானது. 65 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 230 கோடி ரூபாயை வசூலித்துள்ளது இந்தப் படம். இது மகேஷ் பாபுவின் 24-வது படம்.
இதைத் தொடர்ந்து 25-வது படம் பிரமாண்டமான முறையில் தயாராகி வருகிறது. வம்சி படப்பள்ளி இயக்கும் இந்தப் படத்தை, தில் ராஜு, அஸ்வினி தத் மற்றும் பிவிபி சினிமாஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. பூஜா ஹெக்டே, மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கிறார். அல்லரி நரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எம்பிஏ மாணவனாக இந்தப் படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு, பின்னர் முன்னணி நிறுவனம் ஒன்றில் சிஇஓ பொறுப்பேற்பவராக நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் (2019) ஏப்ரல் மாதம் 5-ம் தேதி கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி தொடங்குகிறது. அந்த விடுமுறையைக் கணக்கில் வைத்தே இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது டேராடூனில் நடைபெற்று வருகிறது.