கண்ணப்பா: திரை விமர்சனம்

கண்ணப்பா: திரை விமர்சனம்
Updated on
2 min read

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன.

அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை.

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கைக் கதையை, திரைக்கதையின் சுவாரஸியத்துக்காக தேவையான அளவு கற்பனையும் கலந்து மிரட்டலான திரைக் காவியமாகப் படைத்திருக்கிறது இப்படக்குழு.

முதலில் பாராட்ட வேண்டிய தொழில்நுட்ப அம்சம் ‘புரொடக்‌ஷன் டிசைன்’ (சின்னா). கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றை அதிகம் நம்பாமல், ஆதிக் குடிகளின் வாழ்க்கையை அசல் போல் படைத்துக்காட்ட, ஆயுதங்கள் வடிவமைப்பு உள்ளிட்ட கலை இயக்கம், ஆடைகள், ஒப்பனை ஆகியவற்றில் நாம் அறிந்திராத காலகட்டத்தை உருவாக்கி அதில் நம்பகத் தன்மையைக் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார்கள்.

திண்ணனாக நடித்திருக்கும் விஷ்ணு மன்சு, அவரது கதாபாத்திரத்துக்காக உடலை செதுக்கி, நடிப்பிலும் உயர்ந்து நிற்கிறார். அதேபோல அவரே கதை, திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். வாயு லிங்கத்துக்கு பூஜை செய்யும் மகாதேவ சாஸ்திரி (மோகன் பாபு), ருத்ரனாக வந்து சிவசக்தியை உணர வைக்கும் பிரபாஸ், அர்ஜுனனுடன் மோதும் கிராதாவாக வரும் மோகன்லால், திண்ணனின் காதலியாக வரும் ப்ரீத்தி முகுந்தன், திண்ணன் கண்ணப்பராக உருவெடுத்தக் கதையைக் கூறும் சிவபெருமான் - பார்வதி இணையாக வரும் அக்‌ஷய் குமார் - காஜல் அகர்வால் என ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்தின் திரை வெளியையும் திரைக்கதையின் சுவாரஸியத்துக்கும் திருப்பங்களுக்கும் வலுகூட்ட கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார். தமிழ் பதிப்புக்கான வசனத்தை எழுதிய ஷெசாங் வெண்ணலகாண்டியின் பங்களிப்பு அபாரம்! முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மட்டுமல்ல, துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களும் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஆதிக் குடிகள் வாழும் உடுமூராக சுவிட்சர்லாந்தின் நிலப்பரப்புகளை பிரம்மாண்ட காட்சிமொழியில் கொண்டுவந்துள்ள ஷெல்டன்ஷாவின் ஒளிப்பதிவும் ஸ்டீபன் தேவஸியின் இசையும் படத்துக்கு பெரும் பலம்.

கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை அறிந்த பக்தர்களுக்கு பரவசத்தையும் அவரைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு உணர்வூட்டும் திரை அனுபவத்தையும் தரும் பிரம்மாண்ட உருவாக்கத்துடன் கவர்கிறார் இந்தக் கண்ணப்பர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in