

‘தேவரா 2’ தொடங்கப்படாது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் ‘தேவரா’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. அதே வேளையில் இப்படத்தின் கதை இன்னும் முடியவில்லை, 2-ம் பாகம் இருக்கிறது. தற்போது இப்படம் தொடங்கப்படாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏனென்றால் பிரசாந்த் நீல் படத்தை முடித்தவுடன், நெல்சன் இயக்கும் படம் மற்றும் த்ரிவிக்ரம் இயக்கும் படம் என்று முடிவு செய்திருக்கிறார். இதனால் ‘தேவரா 2’ படம் கைவிடப்பட்டதாக தெலுங்கு ஊடகங்கள் பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதனிடையே ‘தேவரா’ படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவாவுக்கு இன்று பிறந்த நாள்.
இதனை முன்னிட்டு ஜூனியர் என்.டி.ஆர் “பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா. மவுனத்தாலும், வலிமையாலும் பேசும் ஒரு இயக்குநர். உத்வேகம் அளிக்கும் பல கதைகளையும், எங்களுடன் வாழும் தருணங்களையும் உங்களுக்கு வாழ்த்துகிறேன். மீண்டும் ஒருமுறை அலையில் சவாரி செய்ய காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கொரட்டலா சிவா “நன்றி அண்ணயா. ‘தேவரா 2’ மூலம் இந்த முறை இன்னும் ஆழத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இருவரின் எக்ஸ் தளப் பதிவுகளின் மூலம் ‘தேவரா 2’ கைவிடப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.