“எனக்கு 8 ஆண்டுகளாக சுதந்திரம் இல்லை!” - நடிகர் திலீப் உருக்கம்

நடிகர் திலீப் | கோப்புப்படம்
நடிகர் திலீப் | கோப்புப்படம்
Updated on
1 min read

“திரைப்படங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றி பேச, கடவுள் ஒரு நாள் எனக்கு வாய்ப்பளிப்பார்” என்று நடிகர் திலீப் தனது பேச்சில் உருக்கமாக குறிப்பிட்டார்.

மலையாளத்தில் நடிகர் திலீப் நடித்து ‘பிரின்ஸ் அண்ட் பேமிலி’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் திலீப் பேசும்போது ‘ராம்லீலா’ மற்றும் ‘பிரின்ஸ் அண்ட் பேமிலி’ ஆகிய படங்களின் வெற்றி தனது சர்ச்சைக்குரிய காலங்களில் உதவியதாக குறிப்பிட்டார்.

மேலும், தன்னைச் சுற்றி இருக்கும் சர்ச்சைகள் குறித்து திலீப் எதையுமே பேசவில்லை. அதற்கு மாறாக, “கடந்த 8 ஆண்டுகளாக எனது படங்கள் பற்றி மட்டுமே பேசி வருகிறேன். வேறு எதைப் பற்றி பேசவும் எனக்கு சுதந்திரம் இல்லை. ஆனால், ஒரு நாள் கடவுள் எனக்கு பேச வாய்ப்பு தருவார். அந்த நாளுக்காக காத்திருப்பேன். அதுவரை அமைதியாக இருப்பேன்” என்று என்று திலீப் கூறினார்.

காரணம் என்ன? - ஒரு காலத்தில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு இணையாக கருதப்பட்ட முன்னணி நடிகர் திலீப். பாடகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். மலையாள ரசிகர்களால் ‘ஜனப்பிரிய நாயகன்’ என்று அழைக்கப்பட்டவர் திலீப். இந்தச் சூழலில்தான், பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மற்றும் இந்த விவகாரம் தொடர்புடைய சர்ச்சைகளால் திலீப்பின் கரியரும் வெகுவாக பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in