“கதைகள் சொல்வதில் எந்த நாடும் இந்தியாவுக்கு நிகர்  இல்லை” - ராஜமவுலி பெருமிதம்

“கதைகள் சொல்வதில் எந்த நாடும் இந்தியாவுக்கு நிகர்  இல்லை” - ராஜமவுலி பெருமிதம்
Updated on
1 min read

உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாடு மும்பையில் நேற்று தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமவுலி பேசும்போது: “உலகின் வேறு எந்த நாடும் இவ்வளவு துடிப்பான மற்றும் வளமான கதை சொல்லும் கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதில் இந்தியாவை நெருங்கவில்லை. இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கதைசொல்லிகளின் பூமியாக இருந்து வருகிறது. பண்டைய புராணங்கள் மற்றும் இதிகாச நூல்களிலிருந்து லட்சக்கணக்கான கதைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டில் எத்தனையோ மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உண்டு. நம் வரலாறுகளிலிருந்து லட்சக்கணக்கான கதைகள் உள்ளன, அவற்றில் எண்ணற்ற கலை வடிவங்கள் உள்ளன. நம் கதைகள் எல்லையற்றவை. கதை சொல்லல் எப்போதும் இந்தியாவின் டிஎன்ஏவில் இருந்து வருகிறது.

நமது கதை சொல்லும் மரபுகளின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் வேறு எந்த நாடும் ஒப்பிட முடியாது. நம்மிடம் உள்ள சக்தியில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளை விட இந்தியா இன்னும் சர்வதேச பொழுதுபோக்கு அரங்கில் முழுமையாக நிலைநிறுத்தப்படவில்லை. அதற்கு நமக்கு சரியான ஏவுதளம் தேவை. வேவ்ஸ் அதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என்று ராஜமவுலி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in