

சென்னைதான் ஒரு காலத்தில் தென்னிந்திய திரை உலகின் மையமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களுக்கான அனைத்துப் பணிகளும் இங்குதான் நடந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை மாறியது. புதிய தொழில்நுட்பங்களும் யதார்த்தமான சினிமாவைப் படைக்கும் ஆற்றலும் கொண்ட இளம் படைப்பாளர்களின் வருகையும் அந்தந்த மாநில சினிமாவுக்கு வலு சேர்த்தன. ஒரு படத்துக்கான பணிகளுக்காக இன்னொரு மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை தொழில்நுட்பங்களின் வருகை வெகுவாக குறைத்தன. இருப்பினும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தும் வழக்கமும் இன்னும் புழக்கத்தில் இருக்கவே செய்கிறது.
அதுவும் பான் இந்தியா கலாச்சாரம் வந்தபிறகு அண்டை மாநில நடிகர்களும், பக்கத்து மாநில லொகேஷன்களும் ஒவ்வொரு திரைப்படத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இதனால் அனைத்து மொழிப் படங்களையும் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் இந்திப் படங்களே அதிகம் திரையிடப்பட்டன. வாரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் திரையிடப்படும். வெள்ளை வயர் எனப்படும் கேபிள் டிவி வந்த காலத்தில் நிறைய தெலுங்கு டப்பிங் படங்கள் திரையிடப்பட்டது. சிரஞ்சீவி, நாகர்ஜுனா, டாக்டர் ராஜசேகர், வெங்கடேஷ் நடித்த பல படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.
விஜயசாந்தி நடித்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படமெல்லாம் இங்கு பான் இந்தியா கலாச்சாரத்துக்கு முன்னரே பெரு வெற்றி பெற்றிருந்தது. ரஜினி நடித்த 'ராணுவ வீரன்' படத்தில் சிரஞ்சீவி நடித்திதிருப்பார். 'மாப்பிள்ளை' படத்தில் கெஸ்ட் ரோலும் பண்ணியிருப்பார். அதுபோக அவர் நடிப்பில் வந்த பல டப்பிங் திரைப்படங்களும் இங்கு சக்கைப்போடு போட்டன. 'இதயத்தை திருடாதே', 'உதயம்' போன்ற நாகர்ஜுனாவின் படங்களும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தன. அதேபோல் தமிழில் வெற்றிப் படமான 'ப்ரியா' திரைப்படத்தின் ஹீரோவே கன்னட நடிகர் அம்ப்ரீஷ் தான். ரஜினிகாந்த் அதில் கெஸ்ட் ரோல் போலத்தான் நடித்திருப்பார். அதேபோல் ரஜினி நடித்த விடுதலை படத்தில் 'விஷ்னுவர்தன்' நடித்திருப்பார். அதேபோல் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஹீரோயின்கள் வெவ்வேறு மொழிகளில் நடித்து வந்தனர்.
அந்த வகையில் தமிழுக்கும் மலையாளத்துக்கும் தீராத பிணைப்பு ஒன்று நீண்டகாலமாக இருந்து வந்தது. அங்கிருந்து வந்து ஹீரோயின்களாக தமிழ் திரை உலகை ஆட்சி செய்தவர்கள் ஏராளம். கன்னடம் மற்றும் தெலுங்கில் இருந்து கதாநாயகிகள் பலர் வந்திருந்தாலும், கேரளத்தில் இருந்து வந்த நாயகிகளின் பட்டியலே நீண்டது. ஆனால், அங்கு சாதனைகளை செய்த நாயகர்களின் பட்டியல் வெகுநாட்களாக நீளவே இல்லை. மம்முட்டி தான் தொடக்கத்தில் இருந்தே தமிழில் கவனம் செலுத்தி வந்தார். 'மவுனம் சம்மதம்', 'அழகன்', 'தளபதி', 'கிளிப்பேச்சு கேட்கவா', 'மக்களாட்சி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'ஆனந்தம்', 'மறுமலர்ச்சி', 'பேரன்பு' என பல படங்களில் நடித்து அவர் தமிழில் ஒரு மூத்த நடிகராகவே மாறியிருந்தார்.
அதேநேரத்தில், இயக்குநர் ப்ரியதர்ஷனின் ‘கோபுர வாசலிலே’ படத்தில் வரும் கேளடி என் பாவையே பாடலில் மோகன்லால் கவுரத் தோற்றத்தில் வந்திருப்பார். அதன்பிறகு, ‘சிறைச்சாலை’ ‘இருவர்’ஆகிய படங்கள் அவரது ஆகச் சிறந்த தமிழ்ப்பட என்ட்ரியாக இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் உடன் இணைந்து உன்னைப் போல் ஒருவன் படத்தில் காவல்துறை அதிகாரியாக மாஸ் காட்டியிருப்பார். மேலும், ‘ஜில்லா’ படத்தில், விஜய்யின் வளர்ப்பு தந்தையாக நடித்திருப்பார். நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு கேரள ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. மலையாள நடிகர்களுக்கு இணையாக அவரது திரைப்படங்கள் அங்கு கொண்டாடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் கோபியின் டப்பிங் திரைப்படங்களும் அவ்வப்போது தமிழில் வெளியாகும். இருப்பினும் அஜித்துடன் அவர் இணைந்து நடித்த ‘தீனா’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது.இவரைத் தொடர்ந்து நடிகர் ஜெயராம் தமிழில் ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘முறைமாமன்’, ‘ப்ரியங்கா’, ‘கோகுலம்’, ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை தக்கவைத்திருந்தார். அதேபோல், நடிகர் பிருத்விராஜ், ‘பாரிஜாதம்’, ‘மொழி’, ‘கண்ணாமூச்சி ஏனடா, ‘ராவணன், ‘காவியத்தலைவன்’, ‘வெள்ளித்திரை’, நினைத்தாலே இனிக்கும்’, என பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
பொதுவாக ஹுரோயிச சினிமாக்களுக்கு மலையாளத் திரைப்படங்களில் அதிக முக்கியத்துவம் இருக்காது. இதனால் இந்திய திரை உலகில் வங்காளம் மற்றும் மலையாள சினிமாக்களில் நிறைய யதார்த்தமான திரைப்படங்கள் வெளிவந்தன. இதனால், மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர்களை பிற மாநில திரைத்துறையினரால் கூர்ந்து கவனிக்கப்பட்டனர். அதில் திலகன் மிக முக்கியமானவர். மணிரத்னம் தயாரிப்பில், இயக்குநர் கே.சுபாஷ் இயக்கத்தில் வந்த ‘சத்ரியன்’ திரைப்படத்தில் நடிகர் திலகன் அருமைநாயகம் என்ற கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். நீ திரும்பவும் பழைய பன்னீர்செல்வமாக வரணும், என்று விஜயகாந்த்தைப் பார்த்து அவர் வம்புக்கு இழுக்கும் அந்த காட்சி, தமிழ் சினிமாவின் க்ளாஸான காட்சிகளில் இன்றும் தொடர்கிறது.
அவர் தொடர்ந்து ‘ஆயுத பூஜை’ போன்ற படங்களில் நடித்திருந்தார். நகைச்சுவை நடிகரான வி.எம்.சி.ஹனீபாவும் மலையாளத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்தவர். முதல்வன் திரைப்படத்தில் ரகுவரனின் உதவியாளராக அந்த இன்டர்வியூ காட்சியில் வரும் அவரது நடிப்பை யாராலும் மறக்கமுடியாது. அதேபோல், பன்முக கலைஞர் கலாபவன் மணி, தமிழில் பல படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக ஜெமின் திரைப்படத்தில், அவரது வில்லத்தனம் வெகுவாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதுபோல், சண்டக்கோழி திரைப்படத்தில் வில்லனாக காட்டப்பட்ட லால், எத்தனை அற்புதமான திரை கலைஞர் என்பதை ‘கர்ணன்’ திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளிக்கொணர்ந்திருப்பார். அதுபோல் வில்லன், குணச்சித்திர வேடங்களில் மனோஜ் கே.ஜெயன், பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக மலையாள நடிகர்கள் தமிழ் திரையுலகில் தென்படுவர். ஆனால், இன்றைக்கு அந்த நிலை முழுக்கவே மாறியிருக்கிறது. மலையாள திரை உலகின் அத்தனை முக்கிய நடிகர்களும் இன்று கோலிவுட்டில் களம் இறங்கியுள்ளனர். ஒரு பக்கம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ், ‘மாரீசன்’ படத்தில் பஹத் ஃபாசில் பிஸியாக இருக்கிறார். விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்திருக்கும் சுரஜ் வெஞ்சரமூடு சமீப நாட்களாக தமிழ்நாட்டின் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிறார். இதில், ஜோஜு ஜார்ஜ் ஏற்கெனவே தனுஷ் நடிப்பில் வெளிவந்த கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் தனது வழக்கமான பெர்ஃபாமன்ஸை செய்திருந்தாலும், அவர் சரியாக கவனம் பெறவில்லை. இந்தமுறை மணிரத்னம், கமல்ஹாசன் உடன் இணைந்து களம் காண்கிறார். நிச்சயம் இந்தப்படம் அவருக்கு தமிழில் தனது முத்திரையைப் பதிப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமான ஃபஹத், ‘விக்ரம்’ திரைப்படத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹுரோக்களுக்கு இணையாக வலம்வந்தார். அதே ஃபஹத் ‘மாமன்னன்’ படத்தில் காட்டிய வில்லத்தனம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவருக்கான ரசிகப் பட்டாளத்தைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. துல்கர் சல்மான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓகே கண்மணி’ போன்ற படங்களில் நடித்து, அவரது தந்தையைப் போலவே தமிழ் திரையுலகில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார். அதுபோல, மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களான டொவினோ தாமஸ் ‘மாரி -2’ திரைப்படத்திலும், நிவின் பாலி இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும் நடித்துள்ளனர். நிவின் பால் ராம் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
‘விக்ரம்’ படத்தில் வரும் செம்பன் வினோத் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த படத்தில் இருந்த மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் காரணமாக அவர் கூர்ந்து கவனிக்கப்படவில்லை என்ற குறை இருந்து வந்தது. ‘ஜெயிலர்-2’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கப்போவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு, அந்த குறையைப் போக்கிவிட்டது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகர் விநாயகன் மிரட்டியிருப்பார். அவரும் மலையாளத்தின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரே.
மேலும், கோலிவுட்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான எஸ்கே 25-வின் ‘பராசக்தி’ படத்தில் இணைந்திருக்கிறார் மலையாள இயக்குநர் பசில் ஜோசப். இந்த செய்தி இயக்குநர் சுதா கொங்கராவின் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. அதுபோல், மலையாளத் திரையுலகின் செல்லப்பிள்ளை சௌபின் ஷாகிர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் அதுபோல் ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தில் மலையாளத் திரை உலகின் மற்றொரு முன்னணி ஹுரோவான ஷேன் நிகம் நடித்திருந்தார். அதேபோல், விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில், கேரளத்தைச் சேர்ந்த மேத்யூ தாமஸ் விஜய்யின் மகனாக நடித்து தமிழில் தனது கணக்கைத் தொடங்கியிருக்கிறார்.
ஓடிடி வருகைக்குப் பின்னர் மலையாளத் திரைப்படங்களை உன்னிப்பாக கவனித்துப் பார்க்கும் வழக்கம் தமிழ் ரசிகர்களுக்குத் தொற்றிக் கொண்டது. இதனால், மலையாள திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர். இதற்கு எதிர்வினையும் இங்கிருந்து கிளம்பியது. இந்நிலையில், மலையாளத்தில் இருந்து நேரடித் தமிழ்ப்படங்களில் நடிக்க கடவுளின் தேசம் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கும்போது,“ஒரு நகரம் என்பது வெறும் கட்டமைப்பு மட்டுமல்ல, அதன் மக்களும் கூட. தென்னிந்திய இயக்குநர்களை கண்டு பொறாமைப்படுகிறேன்” என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.
ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, மலையாளத் திரைப்படங்களில் நடிப்பதற்காக, அவர்கள் மாலிவுட்டில் வாங்கும் ஊதியத்தைவிட தமிழ் சினிமாவில், அதிகமான சம்பளம் கிடைப்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும், நாம் எப்படி மலையாளத் திரைப்படங்களை ரசித்து கொண்டாடுகிறோமோ, தமிழ்த் திரை உலகத்தின் காத்திரமான படைப்புகளை மலையாள சினிமா ரசிகர்களும், அதன் முன்னணி நட்சத்திரங்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டாடத் துவங்கியதற்கான சாட்சியே இந்த மாற்றங்கள்!