

துல்கர் சல்மான் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ இயக்குநர் நிஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார்.
செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள ‘காந்தா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் துல்கர் சல்மான். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
தற்போது தனது அடுத்த படத்தை துல்கர் சல்மானே தயாரித்து நடிக்கவுள்ளார். இதனை ஆக்ஷன் டிராமாவான ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் இயக்குநர் நிஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார். இப்படத்துக்கு I’m Game என்று தலைப்பிடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 40-வது படமாகும்.
I’m Game படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய துல்கர் சல்மானின் படங்கள் அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று வருவதால் இந்த முடிவினை எடுத்துள்ளது படக்குழு.