

‘லைலா’ படத்தை விளம்பரப்படுத்துதல் விழாவில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
விஸ்வாக் சென் நடிப்பில் உருவாகியுள்ள ‘லைலா’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, அனில் ரவிப்புடி உள்ளிட்டோர் படக்குழுவினருடன் கலந்துக் கொண்டார்கள். இதனால் இந்த விழாவினை பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள்.
இந்த விழாவில் அரசியல், ‘புஷ்பா 2’ உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர் சிரஞ்சீவி பேசினார். மேலும், அனில் ரவிப்புடி உடனான தனது அடுத்த படத்தினையும் உறுதிப்படுத்தினார். இதைத் தாண்டி குணச்சித்திர நடிகர் பிருத்வி பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
‘லைலா’ விழாவில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குறித்து படத்தின் காட்சியோடு ஒப்பிட்டு விமர்சித்தார். இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. #BoycottLailaa என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமோ பிருத்வியின் பேச்சுக்கும், படக்குழுவினருக்கும் சம்பந்தமில்லை எனவும் அது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற பேச்சுகளை ஊக்குவிப்பது இல்லை எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, 2019-ம் ஆண்டு தேர்தலில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்தவர் பிருத்வி. அக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பதி தேவஸ்தானத்தின் வீடியோ பிரிவில் உயரிய பதவி வழங்கியது. ஆனால், பெண் ஊழியரிடம் தவறாக நடந்துக் கொண்ட விவகாரத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கியது. இதனைத் தொடர்ந்து ஜன சேனா கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்தார் பிருத்வி என்பது குறிப்பிடத்தக்கது.