

அனில் ரவிப்புடி உடன் இணைந்து பணிபுரிய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் சிரஞ்சீவி.
‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து சிரஞ்சீவி படத்தை இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி. இந்தக் கூட்டணி குறித்து அனில் ரவிப்புடி பேசியிருந்தாலும், சிரஞ்சீவி பேசாமலேயே இருந்தார். இப்படத்தினை சைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதனிடையே, ‘லைலா’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி மற்றும் அனில் ரவிப்புடி இருவருமே கலந்துக் கொண்டார்கள். இதில் சிரஞ்சீவி பேசும் போது, அனில் ரவிப்புடி உடன் இணைந்து பணிபுரிய இருப்பதை உறுதிப்படுத்தினார்.
அனில் ரவிப்புடி படம் குறித்து, “கோடையில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். அப்படத்தின் கதை தொடங்கத்தில் இருந்து இறுதிவரை முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கும். பல வருடங்களுக்குப் பிறகு முழுமையான எண்டர்டெயினர் படத்தில் நடிக்கவுள்ளேன். ஆகையால் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
அனில் ரவிப்புட்டி வீட்டுக்கு வந்து காட்சிகளைச் சொல்லும்போதே, நாங்கள் இருவரும் பலமுறை சிரித்து விடுவோம். எப்பொழுதும் நாம் கதையை நேசித்து பணிபுரியும்போது, அது நிச்சயமாக பார்வையாளர்களுக்கும் செல்லும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.
மேலும், அனில் ரவிப்புடி படத்தினை சைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது மகள் கொனிடாலா சுஷ்மிதாவின் நிறுவனமான கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் எனவும் குறிப்பிட்டார் சிரஞ்சீவி.