

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்கா’ வெப் சீரிஸ் விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.
தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இந்த வெப் தொடர், 1980-களின் தென்னிந்தியாவில் உள்ள பெர்னூரு என்ற கற்பனை ஊரில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் கதை, அக்கா எனப்படும் பெண்கள் தலைமையிலான குழுவின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்தும் வெளிநாட்டவரின் வருகையால் ஏற்படும் பதற்றம் மற்றும் பழிவாங்கும் செயல்களை சுற்றி நகர்கிறது.
‘அக்கா’ வெப் தொடரின் முதல் பார்வை வீடியோவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகின்றனர். கீர்த்தி சுரேஷ் சக்திவாய்ந்த தலைவராகவும், ராதிகா ஆப்தே அவருக்கு எதிரி போலவும் தெரிகின்றனர். டீசரில் தங்கக் கட்டிகள், துப்பாக்கிகள் மற்றும் தீவிரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடரின் த்ரில்லர் தன்மையை வெளிப்படுத்துகிறது.
‘அக்கா’ வெப் தொடரை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.