

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை வெளியானதை அடுத்து சில நடிகைகள் வெளிப்படையாக பாலியல் புகார்களைக் கூறினர்.
கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர், நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் உள்ளிட்ட சிலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கில் முகேஷை விசாரித்த மராடு போலீஸார் பின்னர் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
இந்நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு, முகேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவருக்கு எதிராக டிஜிட்டல் ஆதாரம் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. நடிகைக்கும் அவருக்கும் இடையில் நடந்த வாட்ஸ் அப் சாட், இமெயில் விவரங்கள் ஆதாரமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.