

மலையாள நடிகரான விநாயகன், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்துள்ள இவர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
கொச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் இவர், தனது வீட்டின் பால்கனியில் நின்றபடி நிர்வாண போஸ் கொடுத்து அருகில் உள்ள வீட்டுக்காரர்களை ஆபாசமாகத் திட்டும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது. அவரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர் மீது யாரும் புகார் கொடுக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் விநாயகன். “ஒரு நடிகராகவும், தனி நபராகவும் என்னால் கையாள முடியாத பல பிரச்சினைகள் உள்ளன. எனது செயலுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.