

இணைய கிண்டல்கள், ரசிகர்களின் இணைய சண்டைகள் அருவருப்பாக இருப்பதாக தமன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
சமீபமாக இணையத்தில் ‘கேம் சேஞ்சர்’ படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது மட்டுமன்றி கிண்டலுக்கும் ஆளானது. அதே போல் ‘டாக்கூ மஹாராஜ்’ படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதற்கு பேட்டியொன்றில் போனி கபூருக்கும், நாக வம்சிக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தைகள் பரிமாற்றம் தான் காரணம் என்று கூறப்பட்டது. ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘டாக்கூ மஹாராஜ்’ படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார் தமன்.
100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘டாக்கூ மஹாராஜ்’. இதற்கான வெற்றிக் கொண்டாட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் தமன், “இப்போது எல்லாம் ஒரு தயாரிப்பாளர் வெற்றியை தனது ஆக்கிக் கொள்ள முடியவில்லை. காரணம் நெகட்டிவிட்டி. இன்று தெலுங்கு சினிமா ஒளிர்கிறது. இதர மொழி தொழில்நுட்ப கலைஞர்கள் கூட தெலுங்கில் பணிபுரிய காத்திருக்கிறார்கள். ஆனால், நாமோ சொந்த சினிமாவை அழிக்கிறோம்.
அனைத்து ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்ளலாம் ஆனால் தயாரிப்பாளரையும் சினிமாவையும் மதிக்க வேண்டும். நான் இந்த இணையக் கிண்டல்கள், ட்ரெண்ட்கள், நெகட்டிவ் டேகுகள் ஆகியவற்றை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தன் பேச்சில் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமனின் இந்தப் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்து சிரஞ்சீவி, “தமன் நீ கூறிய வார்த்தைகள் இதயங்களை தாக்கும் வகையில் இருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே பேசுவாய். ஆனால், உன்னிடம் இவ்வளவு கவலைகள் இருக்கிறது என்பது கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. எந்தவொரு சமூக பிரச்சினையாக இருந்தாலும், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களுடைய வார்த்தைகளின் தாக்கம் சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைக்க வேண்டும்” என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.