

‘கேம் சேஞ்சர்’ வசூல் பின்னடைவால் வாடிவந்த தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பொங்கல் பரிசு ‘மீட்பர்’ ஆக வெளிவந்து வசூலைக் குவித்து வருகிறது அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மினாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ (Sankranthiki Vasthunam) திரைப்படம்.
விஜய்யின் ‘வாரிசு’ படத்தைத் தயாரித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.
இப்படம் ஜன.10-ல் வெளியானது. எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்ட அப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.186 கோடி வசூல் ஈட்டி உள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அதேவேளையில், இந்திய அளவில் முதல் நாள் மட்டுமே ‘கேம் சேஞ்சர்’ நல்ல வசூல் ஈட்டியது என்றும், அடுத்தடுத்த நாட்களில் பெரும் சரிவை சந்தித்தது என்றும் திரை வர்த்தக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஐந்தாவது நாள் முடிவில்தான், இந்திய அளவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம்.
இந்திய அளவில் எடுத்துக்கொண்டால், முதல் நாளில் ரூ.51 கோடி, இரண்டாவது நாளில் ரூ.21.6 கோடி, 3-வது நாளில் ரூ.15.9 கோடி, 4-வது நாளில் ரூ.7.65 கோடி, 5-வது நாளில் ரூ.10 கோடி, 6-வது நாளில் ரூ.5.18 கோடி என ஒட்டுமொத்தமாக ரூ.111.33 கோடி வசூலை ‘கேம் சேஞ்சர்’ ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படம் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என்பதையே வசூல் விவரங்கள் காட்டுகின்றன. உலக அளவிலான வசூல் உள்ளிட்ட வர்த்தகங்களை கணக்கில் கொண்டால் கூட பட்ஜெட்டை சரிசெய்யுமா என்பது சந்தேகமே என திரை வர்த்தகர்கள் கூறுகின்றனர். ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதுமட்டுமன்றி, அந்தப் படத்தின் ‘ஹெச்டி பிரின்ட்’ இணையத்தில் கசிந்ததும் படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவும் படத்தின் வசூலை பாதித்துள்ளதாக நம்பப்படுகிறது.
தில் ராஜுவை மீட்ட இயக்குநர் அனில் ரவிபுடி: விஜய்யின் ‘வாரிசு’ உள்ளிட்ட படங்கள், சில பான் இந்தியா படங்கள் மூலம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து நிதி நெருக்கடியில் சிக்கிய தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ‘கேம் சேஞ்சர்’ படமும் கைகொடுக்காத நிலையில்தான் அந்த ட்விஸ்ட் சம்பவம் நடந்தது. அவர் இணைந்து தயாரித்து, அனில் ரவிபுடி இயக்கத்தில் பொங்கல் ரிலீஸாக வெளிவந்துள்ள வெங்கடேஷ் நடித்த ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ (Sankranthiki Vasthunam) படம் இப்போது மெகா பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை உறுதி செய்துள்ளது.
‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ திரைப்படம் மகர சங்கராந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ.23 கோடியை ஈட்டியதாகவும், இதுவே உலக அளவிலான முதல் நாள் வசூல் ரூ. 34 கோடி என்றும் தெரிவித்தனர். அதேவேளையில், இந்தப் படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.45 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கிய அனில் ரவிபுடி-க்கு தயாரிப்பாளர் நன்றிகடன்பட்டுள்ளார் என்றெல்லாம் தெலுங்கு திரைத்துறையில் பேசிக் கொள்கிறார்கள்.
ஆக்ஷனும், ஃபேமிலி டிராமாவும் சரிவிகிதத்தில் கலந்து அனைத்து தரப்பு தெலுங்கு ஆடியன்ஸையும் கவர்ந்ததுடன், விமர்சன ரீதியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே ரூ.50 கோடிதான். எனவே, தெலுங்கில் இந்த ஆண்டின் முதல் மிகப் பெரிய வெற்றிப் படமாக இது அமையும் என்றும் நம்பப்படுகிறது. இது, தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு உத்வேகத்தையும், நிம்மதியையும் தந்துள்ளதாம். இப்படத்தின் இயக்குநர் ரவிபுடி இயக்கிய முந்தைய படமான பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’யும் மெகா ஹிட் என்பது நினைவுகூரத்தக்கது.