

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைதாகி நீதிமன்ற காவலில் இருக்கும் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் உருவக்கேலிக்கு எதிராக கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பான வழக்கினை விசாரித்த வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, "நமது சமூகத்தில் உருவக்கேலி என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது. ஒருவரின் உடல் குண்டாக, ஒல்லியாக, குள்ளமாக, உயரமாக, கருப்பாக இருப்பதாக கேலி செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நாம் எல்லோரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது.நாம் அனைவரும் முழுமையானவர்கள் இல்லை. இந்த வாழ்க்கையில் நமது உடல் மாறும், மனம் மாறும், நமது இதயமும் மாறும். ஆண்களானாலும், பெண்களானாலும் அடுத்தவர் குறித்து கருத்து கூறும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவர்(பாபி செம்மனூர்) பயன்படுத்திய வார்த்தைகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக இருக்கின்றன. முதல் தகவல் அறிக்கையை பார்க்கும் மலையாளம் தெரிந்த யாருக்கும், மனுதாரர் பயன்படுத்திய வார்த்தைகள் இரட்டை அர்த்தம் கொண்டவை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படலாம்" என்று தெரிவித்தார்.
பாபி செம்மனூர் ரூ.50,000-க்கான பிணை பத்திரம் வழங்க வேண்டும். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும், கூப்பிடும் போது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், சாட்சிகளின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடாது. இதுபோன்ற தவறுகளை திரும்பச் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரின் பெயரில் பாபி செம்மனூருக்கு ஜாமீன் வழங்க எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட நிலையில் பாபி ஜன.8-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார். தனது மனுவில் தன்மீதான குற்றம் ஆதாரமற்றது, அரசியல் நோக்கம் கொண்டது என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு ‘திருவனந்தபுரம் லாட்ஜ்’ என்ற படத்தின் மூலம் பிரபலமான ஹனி ரோஸ், நகை வியாபாரம் செய்து வரும் பாபி செம்மனூர் மீது சமீபத்தில் போலீஸில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார்.
பாபி செம்மனூர், நகை வியாபாரம் செய்து வரும் செம்மனூர் குழுமத்தின் தலைவராவார். கடந்த 2012-ம் ஆண்டு, கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவை கேரளாவுக்கு அழைத்து வருவதில் முக்கிய பங்காற்றினார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு ஜன.8ம் தேதி கைது செய்யப்பட்டார்.