

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ராஜமவுலி. இப்படம் தான் இந்தியாவில் தயாராகும் அதிகப் பொருட்செலவினைக் கொண்ட படம் என்று பெயரெடுக்கவுள்ளது. இந்தியா மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளில் உள்ள காடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ராஜமவுலி – மகேஷ் பாபு இருவருமே சம்பளம் எதுவுமே வாங்கவில்லை. மாறாக இருவரும் லாபத்தில் 40% சம்பளம் என்ற முறையில் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருப்பதால், இதிலேயே பல கோடிகள் சம்பளமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
இன்று ராஜமவுலியின் அலுவலகத்தில் இப்படத்தின் பூஜையினை சிறியளவில் நடத்தி பணிகளைத் தொடங்கவுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இருந்து முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், 2- பாகங்களாக உருவாக்கவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகத்தினை 2027-ம் ஆண்டும், இரண்டாம் பாகத்தினை 2029-ம் ஆண்டு வெளிக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள்.
இப்படத்துக்காக ஹாலிவுட் தயாரிப்பு ஸ்டூடியோக்களான சோனி மற்றும் டிஸ்னி ஆகிய நிறுவனங்களுடன் கைகோக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.