

2024-ம் ஆண்டில் ரூ.700 கோடி நஷ்டம் என கேரள தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளது திரையுலகம்.
2024-ம் ஆண்டு மலையாள திரையுலகம்தான் நல்ல படங்கள் கொடுத்தது என்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வந்தது. ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆவேஷம்’, ‘பிரேமலு’, ‘வாழ’ என பல படங்கள் இந்தியளவில் பெரும் கவனத்தை ஈர்த்தன. இவற்றில் சில படங்கள் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமும் விளம்பரப்படுத்தினார்கள். இதில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம்தான் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஓர் அதிர்ச்சிக்குரிய விஷயம் ஒன்றை தெரிவித்திருக்கிறது. என்னவென்றால், 2024-ம் ஆண்டு மொத்தம் வெளியான 199 படங்களில் 26 படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. மொத்த படங்களின் தயாரிப்பு செலவான ரூ.1,000 கோடியில், ரூ.300 கோடி மட்டுமே லாபம் கிடைத்திருக்கிறது. மீதமுள்ள ரூ.700 கோடி நஷ்டம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும், நஷ்டமடைந்த படங்களின் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய உதவ வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் தயாரிப்பாளர்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இந்த விஷயம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திரையுலகினர் மத்தியிலும் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.