

பிரபல நடன இயக்குநர், ஷேக் ஜானி பாஷா என்ற ஜானி மாஸ்டர். இவர் தமிழில் அரபிக்குத்து, ரஞ்சிதமே, காவாலா, மேகம் கருக்காதா உட்பட பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பெண் நடன கலைஞர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.
இந்நிலையில் தெலுங்கு நடன இயக்குநர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக ஜோசப் பிரகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்கெனவே தலைவராக இருந்த ஜானி மாஸ்டர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டதாகச் செய்திகள் பரவின. அதை நம்பவேண்டாம் என்று ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நடன இயக்குநர்கள் சங்கத்திலிருந்து என்னை நீக்கிவிட்டதாகப் பொய் பிரச்சாரம் செய்யப் படுகிறது. சங்கத்தின் தலைவராக எனது பதவி காலம் இன்னும் முடியவில்லை என்றாலும் நியாயமற்ற முறையில் தேர்தல் நடத்தியுள்ளனர். இதை சட்டப்படி எதிர்கொள் வேன். ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளேன். இந்தப் பாடல் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.