

சத்யதேவ், பிரியா பவானி சங்கர், சத்யராஜ் நடித்து கடந்த மாதம் 22-ம் தேதி வெளியான படம், ஜீப்ரா. தெலுங்கில் உருவான இந்தப் படம் தமிழிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய ஈஸ்வர் கார்த்திக், தமிழில் ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ படத்தை இயக்கியிருக்கிறார். அவர் கூறியதாவது:
ஜீப்ரா படம் சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம் என 3 மொழிகளில் வெளியான இந்தப் படம் கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. பெண்குயின் படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தை வித்தியாசமான கதையாக உருவாக்க நினைத்தேன். வங்கிகளில் நடக்கும் குற்றங்கள் பொதுவாக வெளியே தெரியாது. தெரிந்தால் வங்கியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்துச் சொல்ல மாட்டார்கள். வங்கி தொடர்பாக நான் படித்தது, கேள்விப்பட்டது ஆகியவற்றைச் சேர்த்து இந்தக் கதையை உருவாக்கினேன்.
தயாரிப்பாளர்களில் ஒருவர் தெலுங்கில் பண்ணலாம் என்றார். அதனால் அங்கு சென்றேன். இந்தப் படத்தை அடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சில நடிகர்களுடன் பணியாற்றுவதற்காகப் பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தும் ஆக்ஷனுடன் கூடி ஜாலியான படமாக இயக்க இருக்கிறேன். ஆனால், அதுவும் புதுமையாக இருக்கும். இவ்வாறு ஈஸ்வர் கார்த்திக் கூறினார்.