

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.449 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தப் படம் இந்தி வெர்ஷனில் மட்டும் படம் ரூ.100 கோடியை எட்டி ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. முன்னதாக, வெளியான ‘புஷ்பா’ முதல் பாகமும் இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை வசூல் பெரிய அளவில் இல்லை. கிட்டதட்ட ரூ.25 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா, இந்தி பேசும் மாநிலங்களின் வசூல் அதிகரித்துள்ளது.
அதன்படி, படம் வெளியான முதல் நாளான வியாழக்கிழமை (டிச.5) ரூ.294 கோடியை வசூலித்ததுள்ளதாக அறிவிக்கப்படது. இரண்டு நாட்களையும் சேர்த்து உலகம் முழுவதும் ரூ.449 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.320 கோடியை கடந்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது ‘புஷ்பா 1’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (டிச.5) வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.