

ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் திரையிடலின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதனால் வசூலில் பின்னடைவு ஏற்படும் என தெலுங்கு திரையுலகினர் கலக்கத்தில் உள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூல் சாதனை புரிந்து வருவது மட்டுமன்றி, சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் நடந்த பிரீமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். இதனால் இத்திரையரங்கில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும் ஸ்ரீதேஜ் என்ற அவரது மகனும் மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனை முன்வைத்து இனிமேல் பிரீமியர் காட்சிகளுக்கு அனுமதியில்லை என்று தெலங்கானா அமைச்சர் அறிவித்துள்ளார். இதுவே தெலுங்கு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனென்றால் பொங்கல் விடுமுறைக்கு ராம்சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’, வெங்கடேஷ் நடித்துள்ள ‘சங்கரந்திக்கு வஸ்துனாம்’ மற்றும் பாலையா நடித்துள்ள ‘டாக்கு மகாராஜ்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இப்படங்கள் எதற்குமே பிரீமியர் காட்சிகளுக்கு அனுமதியில்லை என்பது இப்போதே உறுதியாகிவிட்டது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிசாம் ஏரியா தான் விநியோகத்தில் பெரிய ஏரியாவாகும். அரசின் இந்த முடிவினால் வசூலில் பெரியளவுக்கு குறைய வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பு காட்சிகள் இல்லாமல் வழக்கமான காட்சிகள் மட்டுமே இருக்கும் என்று கருதப்படுகிறது. விரைவில் பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்க இருக்கிறது.