ஆஜராவதை தவிர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா... அசராத ஆந்திர போலீஸ்!

ராம் கோபால் வர்மா வீடு முன்பு காவல் துறையினர்.
ராம் கோபால் வர்மா வீடு முன்பு காவல் துறையினர்.
Updated on
1 min read

அமராவதி: சமூக வலைதளத்தில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கு எதிராக அநாகரிகமான முறையில் கருத்து பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில், ‘டிஜிட்டல் முறையில் அவர் ஆஜராக அனுமதிக்க வேண்டும்’ என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் அநாகரிமான முறையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டார். இதையடுத்து பிரகாசம் மாவட்டம் மட்டிப்பாடு காவல் நிலையத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு நவம்பர் 24-ம் தேதி ஆஜராகுமாறு ராம் கோபால் வர்மாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.

தனக்கு படப்பிடிப்புகள் இருப்பதால் கால நீட்டிப்பு கோரியிருந்தார். இதையடுத்து, இன்று (நவ.25) நேரில் ஆஜராக வேண்டும் என காவல் துறை தெரிவித்தது. இதனால் அவரது வீட்டுக்கு முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. இது தொடர்பாக ராம் கோபால் வர்மா வீட்டுக்கு வெளியே அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேரடியாக ஆஜராக வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இப்போது தான் டிஜிட்டல் இந்தியா வந்துவிட்டது. அதேபோல டிஜிட்டல் காவல் துறையும் வந்துவிட்டது. அதனால் டிஜிட்டல் முறையில் ஆஜராக அனுமதி கொடுங்கள். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்போம். தற்போது நடைமுறைக்கு வந்துள்ள பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டம் இதற்கு வழிவகை செய்கிறது” என்றார்.

இது தொடர்பாக பிரகாசம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தாமோதர் கூறுகையில், “ராம் கோபால் வர்மா விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். இரண்டாவது முறையும் அவர் ஆஜராக தவறிவிட்டார். படப்பிடிப்பு காரணமாக 25-ம் தேதி ஆஜராவேன் என கூறியிருந்தார். ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை. அவர் கூறும் காரணங்களை ஏற்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in