

சென்னை: அனுஷ்காவின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்துள்ள‘Ghaati’ தெலுங்கு படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
க்ளிம்ஸ் எப்படி? - தொடக்கத்தில் காடும், மலையும் சூழ்ந்த பகுதி ஒன்று பிரமாண்ட காட்சிகளுடன் காட்டப்படுகிறது. ஒருவித த்ரில்லருடன் ஒலிக்கும் பின்னணி இசை அடுத்த காட்சிக்கு அழைத்துச் செல்ல, திடீரென கையில் அரிவாளுடன் ‘ஆக்ஷன்’ மோடில் நிற்கிறார் அனுஷ்கா. அடுத்த காட்சியில், பின்பக்கமாக ஒருவரின் கழுத்தை அறுக்கும், அனுஷ்கா முகத்தில் ஆக்ரோஷத்துடன் ரத்தமும் படர்ந்திருக்கிறது. தொடர்ந்து ஆத்திரம் அடங்கும் வேளையில், கையில் சுருட்டு பிடித்துக் கொண்டு அனுஷ்கா நின்றுகொண்டிருக்க டைட்டில் வந்து செல்கிறது. ரத்தம் தெறிக்கும் அனுஷ்காவின் ஆக்ஷன் சம்பவமாக இந்தப் படம் இருக்கும் என்பதை கிளிம்ஸ் உணர்த்துகிறது.
Ghaati: அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘Ghaati’ என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான ‘வானம்’ படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனான ‘வேதம்’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக அனுஷ்காவுடன் கிரிஷ் கைகோத்துள்ளார். இந்தப் படத்தை யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிகிறது. வீடியோ: