

டிக்கெட் விற்பனையில் ‘ஷோலே’ படத்துக்கு பின் ‘பாகுபலி 2’ சாதனை செய்துள்ளது என அதன் தயாரிப்பாளர் ஷோபு பகிர்ந்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’. இந்த இரண்டும் படங்களும் சேர்த்து சுமார் 2500 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இதில் ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் மட்டுமே சுமார் 1800 கோடி ரூபாய் இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தார்கள்.
உலகளவில் ‘பாகுபலி’ படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது இதன் தயாரிப்பாளர் ஷோபு புதிய சாதனை ஒன்றை பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் ‘பாகுபலி 2’ படத்துக்கு 10 கோடிக்கும் அதிகமாக டிக்கெட் விற்கப்பட்டது. அந்தச் சமயத்தில் டிக்கெட்டின் விலை 125 ரூபாயாக இருந்தது. அதற்குப் பிறகு மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கே.ஜி.எஃப் 2’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்கள் கூட இதில் பாதி அளவுக்கு தான் டிக்கெட் விற்பனையானது.
இனி வரும் படங்கள் ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் சாதனையை தாண்டலாம். ஏனென்றால் இப்போது டிக்கெட் விலை 300 ரூபாயாக இருக்கிறது. டிக்கெட் விற்பனையில் இந்தியாவில் ‘ஷோலே’ படம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு 13 கோடிக்கும் அதிகமாக டிக்கெட் விற்பனையானது. அந்தச் சமயத்தில் மக்களுக்கு சினிமா மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது. ‘ஷோலே’ படத்துக்குப் பிறகு டிக்கெட் விற்பனையில் ‘பாகுபலி 2’ தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.