

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனைக் காண அவரது ரசிகர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு சைக்களில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்துப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ரசிகர் ஒருவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரில் இருந்து ஹைதராபாத்துக்கு சைக்கிளில் சென்றுள்ளார். கிட்டத்தட்ட 1,600 கிலோ மீட்டர் தூரத்தை அவர் சைக்கிளில் கடந்துள்ளார். இறுதியாக ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்த அவர், நெகிழ்ச்சியுடன் தனது பயணம் குறித்து விவரித்துள்ளார். இதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த அல்லு அர்ஜுன், அவர் திரும்பி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி தனது உதவியாளரிடம் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான ‘மேச்சோ மேன்’ என பெயரிடப்பட்டுள்ள இன்ஸ்டா பக்கத்தில் அந்த ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், “இறுதியாக என் ஹீரோ அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்துவிட்டேன். அவர் உண்மையில் மிகவும் இனிமையானவர். என்னுடைய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரை நேரில் சந்தித்து மிகவும் எமோஷனலான அனுபவமாக இருந்தது. என்னுடைய பெற்றோர்களின் ஆசீர்வாதம் மற்றும் ஃபாலோயர்ஸ்களால் எனது கனவு நனவானது” என பதிவிட்டுள்ளார். அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.