

சமீபத்தில் வெளியான ஹாரர் படமான ‘பேச்சி’யில் நடித்தவர் தேவ். அடுத்து புதிய படம் ஒன்றைத் தயாரித்து, நாயகனாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: குறும்படங்களிலிருந்து நடிப்பு பயணத்தைத் தொடங்கினேன். பாலாஜி மோகன் இயக்கிய ‘வாயை மூடி பேசவும்’ மூலம் சினிமாவில் அறிமுகமானேன். தொடர்ந்து ‘ஒருநாள் கூத்து’ படத்தில் நடித்தேன்.
அந்தப் படத்துக்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவாளர். அப்போது ஏற்பட்ட நட்பு மூலம் அவர் தயாரித்த ‘பேச்சி' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். தியாகராஜன் குமாரராஜா திரைக்கதையில் ’ஜல்லிக்கட்டு’ இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன். இளையராஜா இசை. 5 நாட்கள் படப்பிடிப்போடு அது நின்றுவிட்டது. ஆனாலும் அதில் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.
‘பேச்சி’ சிறந்த அனுபவத்தையும் அடையாளத்தையும் தந்திருக்கிறது. மூத்த நடிகர்கள் என் நடிப்பைப் பாராட்டியதில் மகிழ்ச்சி. சுமார் 100 விளம்பர படங்களைத் தயாரித்த அனுபவத்தில் நண்பர்களுடன் இணைந்து படம் தயாரித்து நடிக்க இருக்கிறேன். தற்போது, இணையத் தொடர் மற்றும் 2 படங்களில் நடித்து வருகிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு தேவ் கூறினார்.