

விகாஸ் பால் இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘குயின்’. பாபி சிங், சித்தார்த் திவான் இருவரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். அமித் திரிவேதி, ருபேஷ் குமார் ராம், ஆதித்யா குமார் என மூன்று பேர் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், கங்கனா ரனாவத் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். லிசா ஹைடன், ராஜ்குமார் ராவ், மிஷ் பாய்கோ, ஜெஃப்ரி ஹோ, யோகேந்திரா டிகு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. மக்களுக்கு இந்தப் படம் ரொம்பவே பிடித்துப் போனதால், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 12.50 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 108 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.
வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், இயக்குநர் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்யா மோத்வானி, மது மேண்டனா என நான்கு நிறுவனங்கள் இணைந்து ‘குயின்’ படத்தைத் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பலர் போட்டி போட்டனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளின் ரீமேக் உரிமையையும் சேர்ந்து மனு குமாரன் என்பவர் வாங்கியுள்ளார்.
தமிழில் இந்தப் படத்துக்கு ‘பாரிஸ் பாரிஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்க, தமிழச்சி தங்கபாண்டியன் கதை எழுதியுள்ளார். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, அமித் திரிவேதி இசையமைக்கிறார். முதலில் இந்தப் படத்தை ரேவதி இயக்குவதாகவும், சுஹாசினி வசனம் எழுதுவதாகவும் இருந்தது.
‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். முதலில் இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்றார்கள். பின்னர், த்ரிஷா, பார்வதி, நித்யா மேனன் என பலரது பெயர்கள் அடிபட்டன. பின்னர், தமன்னா தமிழ் ரீமேக்கிலும், அமலா பால் மலையாள ரீமேக்கிலும், பருல் யாதவ் கன்னட ரீமேக்கிலும் நடிப்பதாகக் கூறப்பட்டது. அத்துடன், நான்கு மொழிகளிலுமே எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றார்கள்.
இறுதியாகத் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவ்வும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிப்பதென முடிவானது. அமலா பால் தேதிகள் இல்லையென விலகிக் கொண்டார். தமிழில் இந்தப் படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்தே கன்னடத்திலும் இயக்குகிறார். அங்கு இந்தப் படத்துக்கு ‘பட்டர்ஃபிளை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (ஜூன் 5) பருல் யாதவுக்குப் பிறந்த நாள். தமன்னா, காஜல் அகர்வால் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து அவர் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார்.