

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ திரைப்பட கொண்டாட்டத்தின்போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் ஜூனியர் என்டிஆரின் பேனர் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இதனால் திரையரங்க வளாகம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராம் சரணுடன் இணைந்து ஜூனியர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தவிர்த்துவிட்டு, ஜூனியர் என்டிஆரின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இதன்காரணமாக இன்று வெளியாகியுள்ள ‘தேவரா’ படத்துக்கு ரசிகர்கள் ஆந்திரா, தெலங்கானாவின் மிகப் பெரிய ஓப்பனிங் கொடுத்துள்ளனர். இதில் சில அசம்பாவிதங்களும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் ஹைதராபாத்தின் ஆர்டிஎக்ஸ் சாலையில் உள்ள சுதர்சன் 35 எம்எம் திரையரங்கில் ஜூனியர் என்டிஆரின் மிகப்பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன. அதன் அருகே ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பேனர் ஒன்று பற்றி எரிந்தது. அதிலிருந்து வெளியேறிய புகை திரையரங்க வளாகத்தை சூழ்ந்தது. இதனால் ரசிகர்கள் அங்கிருந்து உடனே வெளியேறினர். சிலர் தங்கள் செல்ஃபோன்களில் வீடியோ எடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக, தெலங்கானாவில் உள்ள திரையரங்கில் ‘தேவரா’ படம் திரையிட தாமதமானதால் ரசிகர்கள் திரையரங்கை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.