பாலியல் வழக்கில் நடிகர் முகேஷ் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

நடிகர், சட்டமன்ற உறுப்பினர் முகேஷ்
நடிகர், சட்டமன்ற உறுப்பினர் முகேஷ்
Updated on
1 min read

கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர், ஜாமீன் கிடைத்ததை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதை அண்மையில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதையடுத்து பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். இதனை விசாரணைக்கு கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்தது. அந்த வகையில் நடிகரும், கொல்லம் தொகுதி சிபிஎம் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் எர்ணாகுளத்தின் மரடு பகுதி காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த பெண் அளித்த புகாரில், “மரடு பகுதியில் உள்ள வில்லாவில் முகேஷ் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதேபோல ஒட்டப்பாலம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், ‘அம்மா’ அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை பெற்றுத் தருவதாகவும், நடிக்க வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தார்” என குற்றம் சாட்டினார். மேலும் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த பெண் நடிகை ஒருவரும் முகேஷ் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் பாலியல் புகாரில் இன்று முகேஷ் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரி பூங்குழலி அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு கீழமை நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in