

ஹைதராபாத்: “இங்கே அனைத்துமே வர்த்தகத்தை சார்ந்திருக்கும்போது, எல்லா வயதினரையும் ‘என்டர்டெயின்’ செய்ய வேண்டிய பொறுப்பும் அழுத்தமும் நட்சத்திர நடிகர்களுக்கு உள்ளது. ஆக, வர்த்தக்கத்தையும், எண்களையும் நோக்கி சிந்திக்க ஆரம்பிக்கும்போது கதையில் சமரசங்கள் ஏற்படும்” என நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ ஆகஸ்ட் 29-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “இந்தப் படத்தில் நான் நாயகனாக இருந்தாலும், இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், விவேக் ஆத்ரேயா, முரளி ஷர்மா என பலருக்கும் சமமான திரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களையும் நீங்கள் ரசிப்பீர்கள். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அது ஒருவகையில் நடிப்பில் எனக்கு புதிய கண்ணோட்டத்தை கொடுத்தது” என்றார்.
மேலும், “இங்கே அனைத்துமே வர்த்தகத்தை சார்ந்திருக்கும்போது, எல்லா வயதினரையும் ‘என்டர்டெயின்’ செய்ய வேண்டிய பொறுப்பும் அழுத்தமும் நட்சத்திர நடிகர்களுக்கு உள்ளது. ஆக, வர்த்தக்கத்தையும், எண்களையும் நோக்கி சிந்திக்க ஆரம்பிக்கும்போது கதையில் சமரசங்கள் ஏற்படும். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கான திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.
திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்ளின் எண்ணிக்கை குறித்து பேசுகையில், “பார்வையாளர்கள் திரையரங்குக்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், ‘மினிமம் கேரண்டி’ எனப்படும் உத்தரவாதம் அளிக்கும் படங்கள் தான் குறைந்துவிட்டது. இப்படியான நிலையில், பார்வையாளர்களை குறை கூற முடியாது. நல்ல கதைகள் இருந்தால், நிச்சயம் அவர்கள் வருவார்கள்.
என்னை பொறுத்தவரை என்னுடைய படங்களின் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் தகவல்களை நான் அறிந்துகொள்ள நினைப்பேன். பணம் போட்டவர்கள் அதை திரும்ப எடுக்கவில்லை என்றால் எனக்கு அது வெற்றியல்ல. எல்லோரும் படம் வெற்றி என சொல்லிக்கொண்டிருக்கும்போது இரண்டு பகுதிகளில் இருப்பவர்கள் லாபம் பார்க்கவில்லை என்றாலும், அது என்னை தொந்தரவு செய்யும்” என்றார்.