

பெங்களூரு: “கர்நாடகாவில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்ற மறைந்த நடிகர் ராஜ்குமாரின் கனவை இந்த அரசு நனவாக்கும். அரசு சார்பில் நடத்தப்படும் விருது விழாக்கள் சரியான நேரத்தில் நடத்துவதை உறுதி செய்வோம். மாநில அரசு சார்பில் ஓடிடி தளம் உருவாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கத்தின் புதிய கட்டிடத்தை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கட்டிட திறப்பு நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “கன்னட சினிமாவின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
இந்தக் கட்டிடத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கர்நாடகாவில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்ற மறைந்த நடிகர் ராஜ்குமாரின் கனவை இந்த அரசு நனவாக்கி அவரை கவுரவிக்கும். தனியார் முதலீட்டுடன் வளர்ச்சியை தொடர்வோம். அரசு சார்பில் ஓடிடி தளத்தை உருவாக்குவது குறித்து மிகுந்த கவனத்துடன் பரிசீலிப்போம்” என்றார்.
மேலும், “திரைத்துறையில் உள்ள சவால்களை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முயல்வோம். திரைப்பட மானியங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் நடைபெறும் விருது விழாக்கள் அதற்குரிய சரியான நேரத்தில் நடத்துவதை உறுதி செய்வோம்” என்றார்.