

இரு வேறு தலைமுறைப் பெண்களின் மனதுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களும், வடுக்களும், அன்பும், அவற்றின் நீட்சியான பரஸ்பர மன்னிப்பும்தான் மலையாள திரைப்படமான ‘உள்ளொழுக்கு’ படத்தின் ஒன்லைன்.
பெற்றோர்களின் வற்புறுத்தலால் விருப்பமில்லாத கட்டாய திருமணத்துக்கு ஆளாக்கப்படுகிறார் அஞ்சு (பார்வதி). மணமுடித்த சில நாட்களில் கணவன் தாமஸ் குட்டியின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அவரைப் பார்த்துகொள்வதும், பராமரிப்பதும் அஞ்சுவின் அன்றாட வேலை. மாமியார் லீலாம்மா (ஊர்வசி) மகனை பார்த்துக்கொள்ள உதவியாகவும், மருமகளுக்கு துணையாகவும் தோள்கொடுக்கிறார்.
எந்தவித மகிழ்ச்சியுமில்லாமல் நகரும் நாட்களில், அஞ்சுவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவரது காதலன் ராஜீவ் (அர்ஜூன்). இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து பேசி உறவாடிக்கொள்கின்றனர். இதன் விளைவாக அஞ்சு கர்ப்பம் தரிக்கிறார். மறுபுறம் கணவன் தாமஸ் குட்டியின் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழக்கிறார். இந்த திருப்பங்களுடன் சேர்ந்து அஞ்சு - லீலாம்மாவுக்கு இடையே பனிப்போர் மூள்கிறது. அதற்கு என்ன காரணம்? அவர்களுக்குள் படிந்திருக்கும் ரகசியம் என்ன? - இதுவே திரைக்கதை.
19 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கைக்குள் தள்ளப்பட்ட லீலாம்மா, விரும்பத்துக்கு மாறான மணவாழ்க்கையில் சிக்கி தவிக்கும் அஞ்சு ஆகிய இரு பெண்களின் வழியே தலைமுறை தலைமுறையாக நிகழ்த்தப்படும் கட்டாய மணமுடிப்புகளை அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோ டாமி. ‘போலி’ குடும்ப கவுரவம், ‘வெற்று’ பெருமைகளால் நிகழும் இந்திய திருமண அமைப்பு முறையை கேள்விக்குள்ளாக்கிறது படம்.
இருவருக்குள்ளும் புதைந்திருக்கும் ஈரம் காயாத ரகசியத்தை, தொடர் மழையால் வீட்டுக்குள் வடியாமல் தேங்கியிருக்கும் மழைநீரீன் வழியே ஒருவித கவித்துவ கண்ணோட்டத்தில் படத்தை காட்சிப்படுத்தியிருந்த விதம் கவனிக்க வைக்கிறது.
புதைந்திருக்கும் ரகசியங்கள் உடைபடும் இடங்கள், அவருவருக்கென தனித்தனியாக நிலைத்திருக்கும் நியாயங்கள், சுயநல முடிவுகள், வெளிப்படும் துரோகங்கள், அதையொட்டிய மன்னிப்புகள் உள்ளிட்டவை மனித மனங்களின் ஆழத்தை உணர்த்துகின்றன. குறிப்பாக இறுதிக்காட்சியின் ப்ரேமும், மவுனத்தின் வழியே நிகழும் தொடுதலும் க்ளாசிக்!
தவிர்த்து, முழுப்படமும் இறுக்கத்துடனும், பொறுமையான திரைக்கதையுடன் நகர்வது சிலருக்கு அயற்சியை கொடுக்கலாம். அதேபோல பார்வதிக்கு ஆதரவாக பார்வையாளர்கள் எடுக்கும் முடிவுக்கு இறுதியில் நியாயம் சேர்க்காத காட்சிகள் நெருடல்.
வயோதிகத்தால் உருவான நடுக்கம், ஏற்றுக்கொள்ள முடியாத ஏமாற்றம், இழப்பு, கண்ணீர் முட்டி உடைந்து அழும்போது கன்னம் மட்டும் தனியே துடிப்பது என மிக யதார்த்தமான அட்டகாசமான நடிப்பில் தான் சார்ந்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுகிறார் ஊர்வசி. விருப்பமின்மை, நிர்பந்தம், சுயநல முடிவு, ரகசியத்தை வெளிப்படுத்தவும், அடைகாக்கவும் முடியாமல் தவிக்கும் உணர்வுப்போராட்டத்தில் மனநிலையை நடிப்பில் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் பார்வதி.
பெரும்பாலும் ஊர்வசி - பார்வதிக்கான க்ளோஸ் ப்ரேம்கள் தான். இருவரும் போட்டிப்போட்டு திரையில் ஸ்கோர் செய்து ரசிக்க வைக்கின்றனர். தவிர, அர்ஜூன், பிரசாந்த் முரளி தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்.
கொட்டித்தீர்க்கும் மழையையும், பரந்து விரிந்து கிடக்கும் ஆற்றைக் கிழித்துக்கொண்டு நகரும் படகின் அழகையும், ட்ரோன் ஷாட்ஸ்களால் ரசிக்க வைக்கிறது ஷஹானத் ஜலாலின் கேமரா. கதைக்கோரும் உணர்வுநிலையை க்ளோசப் ஷாட்ஸ் மூலம் கடத்துவது தேர்ந்த முயற்சி. மழைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மவுனத்தையும், அதன் இறுக்கத்தையும் தனது மெல்லிய பின்னணி இசையால் கடத்துகிறார் சுஷின் ஸ்யாம். தேவையானதை மட்டும் கோர்த்து கதை சொல்லிருக்கும் கிரண் தாஸின் படத்தொகுப்பு ஷார்ப்.
மொத்தமாக ‘உள்ளொழுக்கு’ சமூக நிர்பந்தத்துக்கு உள்ளான இரு தலைமுறை பெண்களின் வாழ்வியலையும், அவர்களின் விருப்பத்தையும் நிதானமான திரைக்கதையுடன் கடத்தும் அழுத்தான படைப்பு.