

மும்பை: நடிகர் நாகர்ஜுனாவை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகரை அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் செயலுக்கு நடிகர் நாகர்ஜுனா மன்னிப்பு கோரியுள்ளார்.
தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் நாகர்ஜுனா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் மும்பை விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.
அங்கிருந்து இருவரும் தங்களது கார் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்றனர். அப்போது விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் நடிகர் நாகர்ஜுனாவை நோக்கி வந்தார். அப்போது நாகர்ஜுனாவின் பாதுகாவலர்கள் அந்த மாற்றுத்திறனாளி ரசிகரை தள்ளிவிட்டனர். இதை பின்னாலிருந்து வந்த நடிகர் தனுஷ் கண்டும் காணாமல் நடந்துவந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், “குறைந்தபட்ச மனிதாபிமானம் இல்லையா?” என சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இதையடுத்து நடிகர் நாகர்ஜுனா சம்பந்தப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள நாகர்ஜுனா, “இந்தச் சம்பவம் என்னுடைய கவனத்துக்கு வந்தது. இப்படி நடந்திருக்க கூடாது. நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.