Published : 11 Jun 2024 03:01 PM
Last Updated : 11 Jun 2024 03:01 PM

கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது - காவல்துறை விசாரணை

நடிகர் தர்ஷன் | கொலை செய்யப்பட்ட ரேணுகாசுவாமி

பெங்களூரு: கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக கூறி, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவை மைசூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அங்கிருந்து அவர் விசாரணைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.

கன்னட சினிமாவில் ‘அனதரு’ (Anatharu), ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ (Krantiveera Sangolli Rayanna) உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா’ (Kaatera) திரைப்படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசுவாமி. தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்த நிலையில், கொல்லபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருடன் சேர்த்து பவித்ரா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

பெங்களூருவின் காமக்ஷிபாளையாவில் உள்ள வாய்க்காலில் கொல்லப்பட்ட ரேணுகாசுவாமியின் உடல் கடந்த ஜூன் 9-ம் தேதி கண்டறியப்பட்டதாகவும், அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரேணுகாசுவாமியின் தந்தை கூறுகையில், “என்னுடைய ஒரே மகன். அவனுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. எனக்கு நீதி வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக காவல்துறை டிசிபி கிரீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனை கைது செய்துள்ளோம். காமக்ஷிபாளையா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x