

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கவுள்ள அடுத்த படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.
‘பாகுபலி’ என்னும் பிரம்மாண்ட படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இரண்டு பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 400 கோடியில் தயாரிக்கப்பட்டன. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது இந்தப் படங்கள்.
தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். - ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். இந்தப் படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராம் சரண் தேஜா, போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர்., திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் ஷூட்டிங் முடிந்தபிறகு, இந்த வருடக் கடைசியில் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இப்படத்தை அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.