‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? - நடிகை கனி குஸ்ருதி ஓபன் டாக்

‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? - நடிகை கனி குஸ்ருதி ஓபன் டாக்
Updated on
1 min read

கொச்சி: “தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் தனது புதிய படத்துக்கான ஆடிஷனுக்கு அழைப்பு விடுத்தார். என்னுடைய அரசியல் கருத்துடன் உடன்படாத படங்களில் நான் நடிப்பதில்லை. அதனால் மறுத்துவிட்டேன்” என நடிகை கனி குஸ்ருதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கான் பட விழாவில் பாயல் கபாடியா இயக்கிய ‘All We Imagine as Light’ என்ற படத்துக்காக உயரிய விருதான கிராண்ட் ப்ரீ விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கான் விழாவில் பிரதான பிரிவில் போட்டியிட்டு விருது வென்ற முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்ததக்கது.

இந்நிலையில், கான் பட விழாவில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த கனி குஸ்ருதி, பிரான்ஸிலிருந்து திரும்பிய பின் மலையாள செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் ‘பிரியாணி’ மலையாள படத்தில் நடித்தது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இந்தப் படத்தில் அழகியலோ, அரசியலோ என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை என பட இயக்குநர் சஜினிடம் கூறினேன். சஜின் ஒரு பின்தங்கிய முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்து தனது அரசியலைப் பேசுகிறார். அது அவருடைய கருத்து. அதேசமயம் அதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. மேலும் நிதி நெருக்கடி காரணமாக அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பொதுவாக என்னுடைய அரசியல் பார்வையுடன் ஒத்துப்போகாத படங்களில் நான் நடிப்பது கிடையாது. ‘பிரியாணி’ படத்தின் இயக்குநர் மீது இருந்த மரியாதையாலும், நிதி நெருக்கடி காரணமாகவும் அதில் நடித்தேன்.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் தனது புதிய படத்துக்கான ஆடிஷனுக்கு அழைப்புவிடுத்தார். என்னுடைய அரசியல் கருத்துடன் உடன்படாத படங்களில் நான் நடிப்பதில்லை. அதனால் மறுத்துவிட்டேன்” என்றார்.

மலையாள சினிமாவில் சமீபத்திய படங்களில் பெண் கதாபாத்திரங்கள் இல்லாதது குறித்து கேட்டதற்கு, “சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட கேரள திரையுலகில் சுவாரஸ்யமான பெண் கதாபாத்திரங்கள் ஏன் எழுதப்படவில்லை அல்லது கதைகளில் அத்தகைய கதாபாத்திரங்கள் ஏன் சேர்க்கப்படுவதில்லை என்று எழுப்பும் கேள்வி நியாயமானது” என்றார்.

கான் பட விழாவில் தர்பூசணி வடிவ கைப்பையை கொண்டு சென்தற்கான காரணம் குறித்து விளக்கிய அவர், “பாலஸ்தீனத்துக்காக மட்டுமின்றி, பல்வேறு பிரச்சினைகளுக்கு தங்களின் ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்த பலரும் பேட்ஜ் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்திருந்தனர்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கான் தொழிலாளர்களின் குறைந்த ஊதியம் போன்ற பிரச்சினைகளை பலரும் வெளிப்படுத்தினர். அந்த வகையில் நான் பாலஸ்தீனத்துக்கான ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து செய்ததுதான் அது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in