மம்மூட்டிக்கு மோகன்லாலின் அன்பு முத்தமும் நடனமும் - வீடியோ வைரல்

மம்மூட்டிக்கு மோகன்லாலின் அன்பு முத்தமும் நடனமும் - வீடியோ வைரல்
Updated on
1 min read

கொச்சி: கேரளாவில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்வில் நடிகர் மம்மூட்டிக்கு மோகன்லால் அன்பு முத்தத்தை பரிசளித்தார். அத்துடன் ‘ஜவான்’ படத்தின் பாடல் ஒன்றுக்கும் நடனமாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் கொச்சியில் ‘வனிதா திரைப்பட விருது’ விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில் பிருத்விராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கடந்த ஆண்டு வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘காதல் தி கோர்’ படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டிக்கு, மோகன்லால் வழங்கினார்.

விருது பெற்ற பின் பேசிய மம்மூட்டி, “43 ஆண்டுகளாக நான் திரையுலகில் இருக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் என்னோடு பயணிக்கும் சக பயணி மோகன்லால். அவர் ஒரு திறமையான நடிகர். சிறப்பாக நடனமாடவும் செய்வார். அனைத்தையும் சிறப்பாக கையாள்வதில் வல்லவர்” என்று புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து மேடையில் மோகன்லால், மம்மூட்டியின் கன்னத்தில் முத்தமிட்டார். உடனே மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. அப்போது உடனே மம்மூட்டி, “காதல் தி கோர்’ என சொல்ல சிரிப்பலை எழுந்தது. அடுத்து மம்மூட்டியும் மோகன்லாலுக்கு முத்தமிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

முன்னதாக ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஜிந்தா பந்தா’ பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஷாருக்கான், “இந்தப் பாடலை சிறப்பாக மாற்றியதற்கு நன்றி சார். உங்கள் பங்களிப்பில் பாதியாவது நான் செய்திருக்கிறேன் என நம்புகிறேன். லவ் யூ சார். உங்களுடன் டின்னர் சாப்பிட காத்திருக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ள மோகன்லால், “உங்கள் அளவுக்கு யாராலும் சிறப்பாக நடனமாட முடியாது. நீங்கள் தான் உண்மையான ‘ஜிந்தா பந்தா’. வெறும் இரவு உணவு தானா? காலை உணவுக்குப் பின் ஜிந்தா பந்தாவை தொடர்வோம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த உரையாடலும், மேற்கண்ட இரு பெரும் நடிகர்களின் முத்தமும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in