

‘அர்ஜுன் ரெட்டி’ பார்ட் 2 உருவாகுமா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குப் பிறகு, இருவருக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘நடிகையர் திலகம்’ (மகாநதி) படத்தில் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’, ஜீவா ஜோடியாக ‘கொரில்லா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘நோட்டா’ படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா.
இந்நிலையில், ‘அர்ஜுன் ரெட்டி’ பார்ட் 2 உருவாகுமா? என விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது. “இயக்குநர் சந்தீப்பும் நானும் இதுகுறித்து ஏற்கெனவே பேசிவிட்டோம். 40 வயதில் அர்ஜுன் ரெட்டியின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதுதான் பார்ட் 2-வின் கதையாக இருக்கும்” என்று பதில் அளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
‘அர்ஜுன் ரெட்டி’, தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலா இயக்கும் இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.