

எர்ணாக்குளம்: ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க எர்ணாக்குளம் கீழமை நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சிராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்து மிரட்டியுள்ளது. மலையாளத்தின் அதிகபட்ச வசூல் சாதனையை எட்டிப்பிடித்துள்ள இப்படம் இன்றும் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “நான் இப்படத்துக்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். படத்தின் தயாரிப்பாளர்கள், படம் வெளியான பிறகு, படத்தின் லாபத்தில் இருந்து 40 சதவீத தொகையை பங்காக தருகிறேன் என கூறியிருந்தார்கள். நானும் காத்திருந்தேன். ஆனால், எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் வர்கி, படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.