Published : 07 Mar 2024 05:56 AM
Last Updated : 07 Mar 2024 05:56 AM

2016 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் 2016-ம் ஆண்டு முதல் 2023 -ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் 2015-ம்ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014-2015-ம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகளும், 2009 முதல் 2013 வரையிலான சின்னத்திரை விருதுகளும் 2008 முதல் 2014 வரையிலான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் என மொத்தம் 314 பேருக்கு தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

3 நீதிபதிகள் கொண்ட குழு

இன்று 2015-ம் ஆண்டுக்கான விருதுகள் 39 பேருக்கு வழங்கப்படுகிறது. 2016 முதல் 2023 வரையிலான திரைப்படம் உள்ளிட்ட விருதுகளுக்கான விருதாளர்களை தேர்வு செய்ய 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு முடிவின்படி, விருதாளர்களுக்கு விருதுகள் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதையடுத்து 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

2015-ல் சிறந்த படத்துக்கான முதல்பரிசு தனி ஒருவன் படத்துக்கும், இரண்டாம் பரிசு பசங்க-2, மூன்றாம் பரிசு பிரபா படத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்துக்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்புப் பரிசு 36 வயதினிலே படத்துக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான பரிசு(இறுதிச்சுற்று) நடிகர் ஆர்.மாதவனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது (36 வயதினிலே) நடிகைஜோதிகாவுக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசு (வை ராஜா வை) நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும் வழங்கப்பட்டது. தனி ஒருவன், இறுதிச்சுற்று, 36 வயதினிலே ஆகிய 3 திரைப்படங்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றது.

முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர்இல.சுப்பிரமணியன் வரவேற்றார். நிறைவில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இரா.வைத்தியநாதன் நன்றி கூறினார். இவ்விழாவில், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், திரைத் துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x