

மலையாளத்தில் மற்ற மொழிகளை ஒப்பிடும்போது சில படங்களிலேயே நடித்துள்ள ஸ்ரீதேவி, அந்தப் படங்கள் தன் திரைவாழ்வை வடிவமைத்த தருணங்கள் என்று எப்போதும் அங்கீகரித்து வந்துள்ளார்.
பாலிவுட்டுக்குச் சென்று ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பெயர் பெறுவதற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக கேரள மக்களின் இதயங்களை வென்றவர் ஸ்ரீதேவி. இந்த ஆரம்பகால திறமை தெற்றென விளங்க அந்தப் படிக்கட்டுகளில் பயணித்து பெரிய உச்சத்தை எட்டினார்.
1969-ம் ஆண்டு இரண்டு மொழிகளில் தயாரான, பி.சுப்பிரமணியன் இயக்கிய, குமார சம்பவம் படத்தில் சுப்பிரமணியன் கதாபாத்திரத்தில் தோன்றினார் ஸ்ரீதேவி. எல்லாம் சிவமயம் பாடல் மலையாள நினைவுகளில் இன்றும் அச்சாணி போல் பதிந்துள்ளது.
ஆனால் 2 ஆண்டுகள் கழித்து ‘பூம்பட்டா’ என்ற படத்தின் மூலம் ஸ்ரீதேவி வருகையை அறிவித்தார். பி.கே.பொட்டிக்காடு இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருப்பார். தன் தாய் இறந்தவுடன் தாயின் நண்பர் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடும் துயரங்களை அனுபவிக்கும் கதாபாத்திரம் ஸ்ரீதேவிக்கு. இது அந்த வயதிலேயே திரைவெளியில் தன் உணர்ச்சிபூர்வ நடிப்பை வெளிப்படுத்திய சந்தர்ப்பமாக அமைந்தது. இந்தப் படத்துக்குத்தான் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசு விருதை வென்றார் ஸ்ரீதேவி.
ஐவி.சசியின் ‘அபினந்தனம்’ படத்திலும் குழந்தை நட்சத்திரக் கதாபாத்திரம். பிறகு 1976-ல் என்.சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த துலாவர்ஷத்தில்தான் முன்னணி கதாபாத்திரம் கிடைத்தது. தமிழ்ப் படமான பெண்ணை நம்புங்கள் என்ற படத்தின் மலையாள ரீ-மேக்கான குட்டவும் ஷிக்ஷ்யம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்திருந்தார்.
இதற்கு ஓராண்டு சென்று மலையாளத்தில் ஸ்ரீதேவி நடித்த சத்யவான் சாவித்ரி பிரபலமடைந்தது. மலையாளத்தில் முதற்கட்ட கரியரில் அவர் 24 படங்களில் நடித்தார். பாலிவுட்டில் தன் அடையாளத்தைப் பதித்து வட இந்தியர்களின் உள்ளங்களை வென்றதையடுத்து மலையாளம் திரையுலகிலிருந்து அவர் விலகியிருந்தார். பிறகு பரதனின் தேவராகம் மூலம் மலையாளத்துக்கு வந்தார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி இவருக்கு ஜோடி.